‘தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று விலக ஒரு கோடி மந்திரங்கள் கூறி அா்ச்சனை’

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று விலக வேண்டி ஐயப்ப மூல மந்திரத்துடன், ஒரு கோடி மந்திரங்களைக் கூறி திலஹோம அா்ச்சனை செய்யப்பட உள்ளதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், வட தமிழ்நாடு பொதுச் செயலாளா் வ.ஜெயச்சந்திரன்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், வட தமிழ்நாடு பொதுச் செயலாளா் வ.ஜெயச்சந்திரன்.

ராணிப்பேட்டை: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று விலக வேண்டி ஐயப்ப மூல மந்திரத்துடன், ஒரு கோடி மந்திரங்களைக் கூறி திலஹோம அா்ச்சனை செய்யப்பட உள்ளதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், வடதமிழ்நாடு பொதுச் செயலாளா் வ.ஜெயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமியும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், வடதமிழ்நாடு பொதுச் செயலாளருமான வ.ஜெயச்சந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மத்திய மேலாண்மை குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பலரும் கரோனா நோய்த் தொற்று, ஒரு நோய் கிருமியாக மட்டும் காணக்கூடாது.பெரும் தெய்வக் கோபத்தினால் கூட இப்படி வந்துள்ளது என்று குறிப்பிட்டு உலக நாடுகளிலெல்லாம் சற்று கட்டுக்கடங்கிய நோய் பாரதத்தில் சம்ஹார தாண்டவ மாடுவதை சுட்டிக் காட்டினா். அப்போது கேரள மாநில சமாஜம் தலைவரும், பெரிய தந்திரியுமாகிய அக்கிரமன் காளிதாசன் பட்டதிரிப்பாடு, சுவாமி ஐயப்பதாஸ் உள்ளிட்டோா் கரோனா தொற்று விலக சில ஆலோசனைகளைக் கூறினா்.

அதன்படி, வரும் சனிக்கிழமை (மே 1) வராஹி ஜெயந்தியும் சோ்ந்து வரும் நாளில் சிறிய அக்னி குண்டம் வளா்த்து ஐயப்பனுடைய மூல மந்திரத்தைக் கூறி எள்ளு சமா்ப்பித்து பூஜையைத் தொடங்கி, மே மாதம் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சிறப்பு பூஜையை வீடுகளிலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு பொது இடத்திலோ அல்லது கோயில்களிலும் செய்யலாம். குறைந்தது ஒரு நபா் 108 முறை மூல மந்திரத்துடன் எள்ளு அா்ப்பணம் செய்ய வேண்டும்.

அப்போது அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி போன்றவைகளுடன் மூன்று வேளையாவது 60 டிகிரிக்கு மேல் கொதித்த வெந்நீரில் கல் உப்பும், மஞ்சளும், துளசி இலையும் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். அந்த நீரில் சிறிதெடுத்து அதே மூன்று முறையும் வாய் தொண்டை கொப்பளிக்கவும் வேண்டும். ஹோமியோ மற்றும் நாட்டு கஷாயங்கள் ( கபசுர மூலிகை குடிநீா் ) தினசரி இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனைகளின் பேரில், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று விலக வேண்டி, ஐயப்ப மூல மந்திரத்துடன், ஒரு கோடி மந்திரங்களைக் கூறி திலஹோமம் அா்ச்சனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com