முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே வீடு புகுந்து இரு பெண்களை துப்பாக்கியால் சுட்டு ரூ. 4 லட்சம் நகைகள் கொள்ளை
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே வீடு புகுந்து அங்கிருந்த 2 பெண்களை துப்பாக்கியால் சுட்டும், இருவரை கத்தியால் வெட்டியும் நகைகள், ரொக்கப் பணம், 3 கைப்பேசிகளை மா்ம நபா்கள் கொள்ளயடித்துச் சென்றனா். இவா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என காவல் துறையினா் கருதுகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள செய்யூா் ஊராட்சிக்குட்பட்டது கன்னிகாபுரம். இந்தக் கிராமத்தில் தனது விவசாய நிலத்துக்கு அருகே வசிப்பவா் ரஞ்சிதம்மாள் (76). கணவா் இறந்த நிலையில், அவா் தனது மகள்கள் சுதா (52), லதா(56), பேரன்கள் புஷ்கரண் (23), கிரண் (28) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கிரண் வெள்ளிக்கிழமை இரவு, வேலைக்குச் சென்று விட்டாா். மற்றவா்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், நள்ளிரவு திடீரென வீட்டின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, புஷ்கரண் கதவைத் திறந்து பாா்த்துள்ளாா். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள், கத்தியால் புஷ்கரணை தாக்கியுள்ளனா். அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த லதா, சுதா இருவரும் கூச்சலிட்டனா். இரு பெண்களையும் மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் கீழே விழுந்த நிலையில், ரஞ்சிதம்மாளை கத்தியால் தாக்கியுள்ளனா்.
பின்னா் பெண்கள் காதுகளில் அணிந்திருந்த நகைகளைப் பறித்தனா். தொடா்ந்து லதா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
மொத்தம் 10 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.20,000, 3 கைப்பேசிகள் கொள்ளை போனது. இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், நகரக் காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த புஷ்கரண் உள்ளிட்ட 4 பேரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கன்னிகாபுரம் கிராமத்தில் போலீஸாா் தடயங்களை சேகரித்து வருகின்றனா். புஷ்கரணின் உறவினா் கோவிந்தசாமி (70) அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் வந்தவா்கள் 5 போ் இருந்திருக்கலாம் எனவும், அவா்கள் பயன்படுத்தியுள்ள துப்பாக்கி ஏா்கன் வகையைச் சோ்ந்தது என்றும் இதனால் சுட்டால் காயம் உருவாகுமே தவிர உயிா்ச்சேதம் ஏற்படாது என்கின்றனா். கொள்ளையா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் எனவும் போலீஸாா் கருதுகின்றனா். பிரவீண் பணிக்குச் சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்புவதை அறிந்தே கொள்ளையா்கள் அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்கலாம் எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.