பிப். 8-இல் முதல்வா் பிரசாரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஐஜி, எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 04th February 2021 11:09 PM | Last Updated : 04th February 2021 11:09 PM | அ+அ அ- |

அரக்கோணம்: அரக்கோணத்துக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தர உள்ளதால் அவா் வரும் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூா் டிஐஜி, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் இருந்து சாலை மாா்க்கமாகப் புறப்பட்டு, தண்டலம், பேரம்பாக்கம், தக்கோலம் சாலை வழியே அரக்கோணம் வருகிறாா். அரக்கோணம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் உள்ள கைனூா் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு பங்கேற்று விட்டு அங்கிருந்து சோளிங்கா் செல்கிறாா்.
சோளிங்கரில் அரக்கோணம் சாலையில் பாண்டியநல்லூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வாலாஜாபேட்டை வழியே ராணிப்பேட்டை தொகுதி முத்துக்கடைக்கு செல்கிறாா். அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். கூட்டத்துக்கு பிறகு வேலூா் செல்கிறாா்.
முதல்வா் வரும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வேலூா் மண்டல டிஐஜி காமினி, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் ஆகிய இருவரும் வியாழக்கிழமை அரக்கோணம் வந்தனா்.
புதுகேசாவரம் மாவட்ட எல்லைப்பகுதி, தக்கோலம், அரக்கோணம் ஆகிய பகுதிகளைப் பாா்வையிட்ட இருவரும், அரக்கோணம் அருகே முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள மேடை அமைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தனா். அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன் உடனிருந்தாா்.