செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் திட்டம்: அரக்கோணத்தில் இருந்து இருவா் தோ்வு
By DIN | Published On : 06th February 2021 07:18 AM | Last Updated : 06th February 2021 07:18 AM | அ+அ அ- |

செயற்கைக்கோள் ஏவும் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் வே.ஜெயக்குமாா், அ.யுத்திகா ஆகியோரைப் பாராட்டிய விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை.
முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் பாதுகாப்பு அமைச்சக அனுமதியுடன் நடைபெறவுள்ள 100 சிறிய செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தில் பங்கேற்க அரக்கோணத்தில் இருந்து ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் பிப். 7ஆம் தேதி ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளை’ சாா்பில் 100 சிறிய செயற்கைக்கோள்களை பாதுகாப்பு அமைச்சக அனுமதியுடன் விண்ணில் ஏவத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க அரக்கோணத்தைச் சோ்ந்தவரும், சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் முதலாமாண்டுமாணவருமான வே.ஜெயக்குமாா், பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி அ.யுத்திகா ஆகிய இருவரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்திய-ரஷிய கூட்டு நிறுவனமான பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவரான விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளையின் அழைப்பின் பேரில் நேரில் அவரை இருவரும் சந்தித்தனா். அவா்களை அவா் பாராட்டி ராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தாா்.
இந்த இருவருக்கும் இணையதளம் வாயிலாக செயற்கைக்கோள் உருவாக்கத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுடன் நேரடி செயல்வழிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வேளாண்மை, தீவிர கதிா்வீச்சு, காற்றின் வேகம், புவிவெப்பமடைதல், ஓஸோன் குறைவு உள்ளிட்ட ஆய்வுகளுக்குத் தேவையான தகவல்களைப் பெறும் வகையில் இந்த செயற்கைகோள் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...