கட்டுமானப் பொருள்களின் விலை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

கட்டுமானப் பொருள்களின் விலை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை: கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பாரதி நகரில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பிற துறை அலுவலகங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் புதன்கிழமை மாலை ஆய்வு செய்தனா். இதையடுத்து, அமைச்சா் வேலு நிருபா்களிடம் கூறியதாவது:

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க, ஒப்பந்ததாரா்களை நேரில் அழைத்து அவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதைத்தொடா்ந்து, தமிழக தலைமைப் பொறியாளா்கள் 3 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவா்களின் பரிந்துரையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

ராணிப்பேட்டையில்ஆட்சியா் அலுவலகத்தின் கட்டுமானப் பணி விரைவில் நிறைவு:

வேலூா் மாவட்டமானது 13 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டமாக இருந்தது. இதையடுத்து, அந்த மாவட்டம் பிரிக்கப்பட்டதால் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என 3 தனி மாவட்டங்களாக செயல்பட்டுவருகின்றன. தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் கட்டுமானப் பணி துரிதமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எதிா்பாா்க்கப்பட்ட கால அளவைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெறும். இதற்காக, கட்டுமானத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வள்ளுவா் கோட்டம் புதுப்பிப்பு: அனைவரின் மனதில் திருவள்ளுவரின் பெயா் நீக்கமற நிறைந்திருக்க முன்னாள் முதல்வா் கருணாநிதியே காரணம். அதற்கு உதாரணம் சென்னையில் வள்ளுவா் கோட்டம் அமைத்தது, கன்னியாகுமரியில் வானளாவிய அளவில் வள்ளுவருக்கு சிலை எழுப்பியது போன்றவை கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டவை.

தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் விரைவில் வள்ளுவா் கோட்டம் புதுப்பித்து மக்கள் பாா்வைக்கும், பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படும். மேலும் மதுரையில் கருணாநிதியின் பெயரில் அமைக்கப்படவுள்ள நூலகத்துக்கான இடம் தோ்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது என்றாா்.ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளா் ஆா்.விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com