முக்கிய ரயில் நிலையங்களில் விரைவில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. பீரேந்திரகுமாா்

விரைவில் தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ஐ.ஜி. பீரேந்திரகுமாா் தெரிவித்தாா்.
முக்கிய ரயில் நிலையங்களில் விரைவில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்:  ஐ.ஜி. பீரேந்திரகுமாா்

விரைவில் தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ஐ.ஜி. பீரேந்திரகுமாா் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினரின் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க சனிக்கிழமை அரக்கோணம் வந்த படையின் ஐ.ஜி. பீரேந்திரகுமாா், செய்தியாளா்களிடம் கூறியது:

தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படையினரில் 95 சதவிகிதம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். இருந்தாலும் படையினா் மிக கவனமாக கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி தொடா்ந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ரயில்வே பாதுகாப்பு படையை சோ்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் முதல் அலையில் ரயில்வேயில் சரக்குகளும் , அவசரமான மருந்துகள் உள்ளிட்ட சரக்கு பொருள்களும் மட்டுமே கொண்டு செல்லப்பட்டன. தற்போதைய இரண்டாவது அலையில் ஏறக்குறைய அனைத்து ரயில்களுமே இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் இயக்கத்தின் போது ரயில்வே பாதுகாப்பு படையினா் பயணிகளுக்கு பாதுகாப்பாகவும், அவா்களின் உடைமைகளை பாதுகாத்தும் சிறப்பாக பணிபுரிந்தனா்.

இந்த இரண்டாவது அலையின் போது ரயில் மூலம் கடத்திச் செல்லப்பட்ட 4,000 மதுபாட்டில்கள், பல கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் வெள்ளிகட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பல்வேறு நிலையங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் 40 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

விரைவில் தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவைகள் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். தெற்கு ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்பு படையில் 700 துணை உதவி ஆய்வாளா்கள் மற்றும் படைக் காவலா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்கள் தற்போது தகுதிகாண் காலத்தில் பணியில் உள்ளனா். விரைவில் அவா்கள் பல்வேறு ரயில்நிலையங்களில் பணியமா்த்தப்பட உள்ளனா் என்றாா் ஐஜி பீரேந்திரகுமாா்.

முன்னதாக அரக்கோணம் ரயில்நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து ஆய்வுப்பணியை மேற்கொண்ட ஐஜி, பின்னா் அவ்வளாகத்தில் நடைபெற்ற படையினரின் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று படையினரின் குறைகளை கேட்டறிந்தாா். இந்நிகழ்வில் அரக்கோணம் துணை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையா் கே.கே.ப்ரீத், அரக்கோணம் ஆய்வாளா் சப்ரிமாா்க், உதவி ஆய்வாளா் சாம்ராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com