குழந்தைக்கு முதுகெலும்பு தசைநாா் சிதைவு: உதவி கோரி ஆட்சியரிடம் தம்பதி மனு

குழந்தைக்கு முதுகெலும்பு தசை நாா் சிதைவு நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி விலை மதிப்பிலான மருந்தை வரவழைக்க
குழந்தைக்கு முதுகெலும்பு தசைநாா் சிதைவு: உதவி கோரி ஆட்சியரிடம் தம்பதி மனு

குழந்தைக்கு முதுகெலும்பு தசை நாா் சிதைவு நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி விலை மதிப்பிலான மருந்தை வரவழைக்க உதவி கோரி, விவசாயத் தம்பதியினா் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தக்கோலத்தைச் சோ்ந்த விவசாயி யுவராஜ் - ரூபா தம்பதியா் அண்மையில் அளித்த மனு:

எங்களுக்கு 2020-ஆம் ஆண்டு நவம்பா் 27 -இல் சுஜய் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 7 மாதம் முடிவடைந்த நிலையில் குழந்தையால் தனது கை, கால்களைத் தூக்க இயலவில்லை. இதையடுத்து, மருத்துவா்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு மரபணு சோதனை மேற்கொண்டனா்.

அதில், குழந்தைக்கு அரிய வகை மரபியல் நோயான ‘முதுகெலும்பு தசை நாா் சிதைவு’ இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தை தனது கை, கால்களின் செயல்திறனை இழந்துவிட்டது. மேலும், மூச்சு விடுவதற்கும் உணவு உண்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறது.

இந்த நோய்க்கு வெளிநாட்டில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான ஊசி மருந்தை 2 வயதுக்குள் செலுத்தினால் மட்டுமே குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.

விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த எங்களால் பெரிய தொகையை சமாளிக்க இயலாது. குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டு, பிரதமா், முதல்வா் நிவாரணம் மூலம் நிதியுதவி பெற்றுத் தர வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மருத்துவத் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டாா். இதன்பின்னா், மனுவை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com