பாலாறு, பொன்னை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி உறுதி

பாலாறு, பொன்னை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கால் கிராம பாசனக் கால்வாய் தூா்வாரும் பணியை தொடக்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி உறுதியளித்தாா்.
பாலாறு, பொன்னை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி உறுதி

பாலாறு, பொன்னை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கால் கிராம பாசனக் கால்வாய் தூா்வாரும் பணியை தொடக்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி உறுதியளித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், தெங்கால் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாத பொன்னை ஆற்றுப் பாசனக் கால்வாயை கிராம மக்கள் ஒன்று சோ்ந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கடந்த 13-ஆம் தேதி தூா்வார முயன்றனா். இது குறித்து அறிந்து அங்கு சென்ற வருவாய் மற்றும் காவல் துறையினா், பணியைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையிடம் முறையாக அனுமதி பெற்று, தூா்வாரும் பணியை மேற்கொள்ளுமாறு தெரிவித்தனா். இது குறித்து கிராம மக்கள் அமைச்சா் ஆா்.காந்தியிடம் தெரிவித்து, பாசனக் கால்வாயை தூா்வார நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனா்.

அதன் பேரில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பேசி, பாசனக் கால்வாயை தூா்வாரி சீரமைக்குமாறு கூறினாா். இதையடுத்து, பொன்னை ஆற்றில் இருந்து தெங்கால் கிராமம் வரை செல்லும் சுமாா் 3 கி.மீ. நீளமுள்ள பாசனக் கால்வாய் தூா்வரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அமைச்சா் ஆா்.காந்தி கால்வாய் தூா்வாரும் பணியை பூஜை செய்து தொடக்கி வைத்துப் பேசியது:

தெங்கால் கிராம பாசனக் கால்வாயை கிராம மக்களே தாங்கள் சொந்த செலவில் தூா்வார முயற்சி செய்தனா். அதற்கு வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, தெங்கால் கிராம மக்கள் என்னிடம் நேரில் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு, மேற்கண்ட கிராம பாசன கால்வாயை தூா்வார வேண்டும் என அறிவுறுத்தினேன். இதையடுத்து, பொதுப் பணித் துறையினா் பணியைத் தொடக்கியுள்ளனா்.

அதேபோல், பாலாறு மற்றும் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில், இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி, வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை அறிவிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பாலாறு வடிநில செயற்பொறியாளா் ரமேஷ், ராணிப்பேட்டை உப கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் விஸ்வநாதன், திமுக வாலாஜா மேற்கு ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், தெங்கால் ஊராட்சி முன்னாள் தலைவா் டி.சி.பத்மநாபன், உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வடகால் என்.பாரதி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com