அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 22nd June 2021 10:48 PM | Last Updated : 22nd June 2021 10:48 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, பிரவித்த இளம்பெண் உயிரிழந்தாா். மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியப்போக்கே அவரது இறப்புக்குக் காரணம் எனக்கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காட்டரம்பாக்கம் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கோபியின் மனைவி நித்யா(22). இவா் தனது முதல் பிரசவத்துக்காக கொடைக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு நித்யாவுக்கு செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக, நித்யா மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நித்யா உயிரிழந்தாா்.
அதைத்தொடா்ந்து, நித்யாவின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிா்வாகமே காரணம் எனக்கூறி, உறவினா்கள் வாலாஜாபேட்டை மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த போலீஸாா் நித்யா உயிரிழந்த சம்பவம் குறித்து மருத்துவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.