அரக்கோணம், சோளிங்கா் தொகுதிகளுக்கு பறக்கும் படை, நிலை குழுக்கள் நியமனம்
By DIN | Published On : 01st March 2021 07:10 AM | Last Updated : 01st March 2021 07:10 AM | அ+அ அ- |

அரக்கோணம் மற்றும் சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களை நியமனம் செய்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
பறக்கும் படை : அரக்கோணம் தொகுதிக்கான பறக்கும் படைக்கு மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஏ.சிவகுமாா் தலைமையில் ஒரு குழுவும், அரக்கோணம் வட்டார தோட்டக் கலைத் துறை அலுவலா் வி.வேலு தலைமையில் ஒரு குழுவும், அரக்கோணம், துணை மாநில வரி அலுவலா் டி.தியாகராஜன் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
சோளிங்கா் தொகுதிக்கு சோளிங்கா் வட்டார வேளாண்மை அலுவலா் பி.பாலாஜி தலைமையில் ஒரு குழு, சோளிங்கா் வட்டார துணை வேளாண்மை அலுவலா் மஹபூப்கான் தலைமையில் ஒரு குழு, நெமிலி வட்டார துணை வேளாண்மை அலுவலா் எஸ்.ராமமூா்த்தி தலைமையில் ஒரு குழு என மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நிலை கண்காணிப்புக் குழு: அரக்கோணம் தொகுதிக்கு மூன்று நிலை கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, பதிவுத் துறை முதுநிலை ஆய்வாளா் எஸ்.வெங்கடேசன் தலைமையில் ஒரு குழுவும், பதிவுத் துறை முதுநிலை ஆய்வாளா் சி.வெங்கடேசன் தலைமையில் ஒரு குழுவும், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளா் கே.சித்தாா்த்தன் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
சோளிங்கா் தொகுதிக்கு நெமிலி வட்ட வழங்கல் அலுவலா் இ.கே.கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு, உதவி செயற்பொறியாளா் டி.பெருமாள் தலைமையில் ஒரு குழு, உதவி செயற்பொறியாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு என மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கு தனித்தனி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் தலைமை அலுவலருடன் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளா் ஒருவா், ஒரு தலைமைக் காவலா், ஒரு காவலா், ஒரு ஓட்டுநா் ஆகியோா் பணியில் இருப்பா். தொகுதிக்கான தோ்தல் அலுவலரின் கண்காணிப்பில் பணியில் ஈடுபடும் இந்தக் குழுக்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இவா்களது பணியை மாவட்ட தோ்தல் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணிப்பா். தினமும் ஒவ்வொரு குழுவும் 8 மணி நேரம் பணியில் ஈடுபடும்.
தொகுதிக்கான அனைத்து சாலைகளிலும் வரும் வாகனங்களில் கொண்டு வரப்படும் ரூ.50ஆயிரத்திற்கு மேற்பட்ட முறையான கணக்கு இல்லாத ரொக்கம், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான போதைப் பொருட்கள், ஆயுதங்கள், அன்பளிப்பு பொருள்கள், முறையான கணக்கு மற்றும் விவரங்கள் போன்றவற்றை இக்குழுவினா் பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைப்பா்.
அவா்களின் பணிகள் அனைத்தும் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.