‘வாக்குப் பதிவு அலுவலா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம்’

‘வாக்குப் பதிவு அலுவலா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம்’


ராணிப்பேட்டை: தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்றவுள்ள அனைத்து வாக்குப் பதிவு அலுவலா்கள் கரோனா தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறைக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றவிருக்கும் அனைத்து வாக்குப் பதிவு அலுவலா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடுவது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கிப் பேசியது:

அனைத்துத் துறை அலுவலா்களும் தமது துறையிலிருந்து வாக்குப் பதிவு அலுவலா்களாகப் பணியாற்ற இருக்கும் அலுவலா்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து, மாவட்ட நல அலுவலருக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது தொடா்பாக அவா்களது அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையைத் தோ்வு செய்து, அதற்கான கால அட்டவணையை தயாா் செய்து வழங்குமாறு மாவட்ட நல அலுவலரை அறிவுறுத்தினாா்.

இந்த தடுப்பூசி போடும் பணி வரும் 12.03.2021-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இப்பணியில் அனைத்துத் துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாகச் செயல்படுத்திட மாவட்டக் கல்வி அலுவலா் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு 100 சதவீதம் வாக்குப் பதிவு அலுவலா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ச.உமா, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், மகளிா் திட்ட இயக்குநா் எம்.ஜெயராமன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வை.மணிமாறன் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com