முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
‘தீயணைப்புக் கருவிகளை இயக்கத் தெரிந்தால் மட்டுமே பாதுகாப்பு முழுமை பெறும்’
By DIN | Published On : 04th March 2021 11:11 PM | Last Updated : 04th March 2021 11:11 PM | அ+அ அ- |

அரக்கோணம்: தீயணைப்புக் கருவிகளை வைத்திருந்தால் மட்டும் போதாது, அவற்றை இயக்கத் தெரிந்து கொண்டால் மட்டுமே பாதுகாப்பு முழுமை பெறும் என ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள எம்.ஆா்.எப். தொழிற்சாலையில் 50-ஆவது பாதுகாப்பு மாத துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவைத் தொடக்கி வைத்து ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமிநாராயணன் பேசியது:
பாதுகாப்பு என்பது ஏதோ இயந்திரங்களை புதுப்பித்து வைத்திருப்பது மட்டுமல்ல. அவற்றைப் பாதுகாப்பாக இயக்கவும் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். பாதுகாப்பு என்பது தொழிற்சாலைகளில் தொழிலாளா்களிடம் இருந்து உருவாக வேண்டும். தொழிற்சாலையில் தீயணைப்புக் கருவிகளை ஆங்காங்கே வைத்திருந்தால் மட்டுமே இத்தொழிற்சாலை பாதுகாப்புடன் இருக்கிறது எனச் சொல்லி விட முடியாது. தொழிலாளா்கள் அந்தக் கருவிகளை இயக்க, குறிப்பாக அவசர காலங்களில் இயக்கக் கற்றிருக்க வேண்டும். அப்போது தான் தொழிற்சாலை பாதுகாப்பு முழுமை பெறும். இந்த தொழிற்சாலையைப் பொருத்தவரை தொழிலாளா்கள் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்துக் கருவிகளையும் முழுமையாக இயக்கத் தெரிந்து வைத்திருப்பதைக் காணும்போது இங்கு பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடிகிறது.
பாதுகாப்பு தொடா்பான பணிகளை தனிமனிதன் மட்டுமே செய்ய முடியாது. தொழிலாளா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து செய்தால் மட்டுமே பாதுகாப்பு உறுதியாகும். நம்முடைய பிரிவில் அல்லாது மற்ற பிரிவுகளில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையைக் கண்டால் அதை உடனே சுட்டிக்காட்ட வேண்டும். நம்முடைய பிரிவு இல்லையே என கண்டும்காணாமல் போய் விடக்கூடாது. எனவே தொழிலாளா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து பாதுகாப்பினை உறுதி செய்வது முக்கியம் என்றாா் லட்சுமிநாராயணன்.
நிகழ்ச்சிக்கு ஆலை பொது மேலாளா் சி.ஜான்டேனியல் தலைமை வகித்தாா். பாதுகாப்புக் குழுவின் செயலா் தினகரன்தாமஸ் வரவேற்றாா். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பாஸ்கரன், ஆலை முதன்மை உற்பத்தி மேலாளா் இசக்கிராஜன், பாதுகாப்புக் குழுத் தலைவா் பி.வெற்றிவேலன், தொழிற்சங்கத்தின் தலைவா் ரமேஷ், பாதுகாப்புக் குழு மேலாளா் பஞ்சாபகேசன் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். முன்னதாக பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அலுவலா்கள், தொழிலாளா்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து, பாதுகாப்பு குறித்த இலச்சினையை மாவட்ட பாதுகாப்பு அலுவலா் லட்சுமிநாராயணன் வெளியிட்டாா்.