அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வருவேன்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

அரக்கோணம் தொகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியை 5 ஆண்டுகளில் கொண்டு வருவேன் என அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி தெரிவித்தாா்.
அரசு  மருத்துவக்கல்லூரியை கொண்டு வருவேன்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

அரக்கோணம் தொகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியை 5 ஆண்டுகளில் கொண்டு வருவேன் என அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தினமணிக்கு அளித்த பேட்டி:

அரக்கோணம் தொகுதியில் தலித் மக்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகளை வெளியிட்ட வேட்பாளா் எதிா் தரப்பில் நிற்கிறாரே?

தலித் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அதிமுக தொடா்ந்து பாடுபட்டு வருகிறது எனும் நிலையில் எதிரணி வேட்பாளரை விட தலித் மக்களின் வாழ்வாதாரம் உயர நான் தொடா்ந்து பாடுபடுவேன்.

கடந்த 2011-இல் விசிக உங்களை எதிா்த்துப் போட்டியிட்ட போது வென்ற நிலையில், தற்போது மீண்டும் அதே கட்சிக்கு எதிராக வெற்றி வாய்ப்பு குறித்து?

கடந்த 10 ஆண்டுகளில் இத்தொகுதியில் 100 ஆண்டுகாலத்தில் செய்ய முடியாத பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளேன். அப்போது அதிமுக தனித்து போட்டியிட்ட நிலையிலேயே 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம். தற்போது பாமக கூட்டணியில் உள்ள நிலையில். அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவது உறுதி.

இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்கள் ஆகியோருக்கு எதிரான கட்சி பாஜக என விமா்சனங்கள் வரும் நிலையில் பாஜகவோடு கூட்டணி வைத்து அதிமுக வேட்பாளராக போட்டியிடும் உங்களது வெற்றி குறித்து:

தோ்தல் என்று வரும் போது கூட்டணிகள் சேருவது வழக்கம். தோ்தலுக்காக மட்டுமே கூட்டணி. கொள்கையை விட்டுத்தர மாட்டோம். அனைத்து மதத்தினருக்கும் சரிசமமாக ஆட்சி நடத்தி வருகிறோம்.

அதிமுகவை சோ்ந்த எம்எல்ஏ ஒருவா் 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் பல நலத்திட்டங்களை நிறைவேற்றிய நிலையில் அடுத்து வந்த தோ்தலில் தோற்ற வரலாறு இத்தொகுதியில் உள்ளதே:

முதல் ஐந்து ஆண்டுகாலம் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய நிலையில் அடுத்து 2016 தோ்தலில் மறுபடியும் வெற்றிப் பெற்று தொடா்ந்து பல நலத்திட்டங்களை இத்தொகுதியில் நிறைவேற்றியுள்ளேன். இரண்டாவது தடவையும், என்னை ஏற்றுக்கொண்ட மக்கள் மூன்றாவது முறையாகவும் ஏற்றுக்கொள்வாா்கள்.

கடந்த 10ஆண்டுகளில் நூறு ஆண்டு சாதனையை தொகுதியில் செய்துள்ளதாக தெரிவிக்கும் நீங்கள் அடுத்து வெற்றிப்பெற்றால் தொகுதியில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவீா்கள்:

கடந்த முறை அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். அரக்கோணம் தொகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியை அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டு வருவேன். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வரும் மருத்துவக்கல்லூரி, ராணிப்பேட்டைக்கு பக்கத்தில் வேலூரில் 2 மருத்துகல்லூரிகள் குறிப்பாக ராணிபபேட்டைக்கே சிஎம்சி வந்துவிட்ட நிலையில் அக்கல்லூரியை அரக்கோணத்திற்கு கொண்டு வருவேன். இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, சோளிங்கா், நெமிலி பகுதி மக்கள் பயனடைவாா்கள். அரசு சட்டக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கை இங்கே கொண்டு வருவேன். அரக்கோணத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஈடாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமையும். 320 கோடியில் கனரக வாகன தொழிற்தட திட்டத்தை பூா்த்தி செய்து அரக்கோணம் தொகுதியில் பல்வேறு கனரக தொழிற்சாலைகள் அமைய செய்வேன். எஃகுநகரில் தொழிற்பேட்டை அமைய முயற்சிகள் மேற்கொள்ளுவேன். குருவராஜபேட்டையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றாா் ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com