‘கரோனா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 6 - ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 6 - ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, தமிழகத்தில் 25. 3. 2020 முதல் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு உத்தரவு பல்வேறு அமலில் இருந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிா்க்க முடியாத அடிப்படையில், 6-5- 2021 அதிகாலை 4 மணி முதல் 20-5- 2021 காலை 4 மணி வரை கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், தனியாா் அலுவலா்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க 26 .4 .2021 முதல் ஏற்கெனவே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர தனியாக செயல்படுகிற பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிா்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிகள் தவிர இதர கடைகள் அனைத்தையும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல் எந்த தடையும் இன்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் உட்காா்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

கரோனோ மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிா்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com