அரக்கோணம் நகராட்சி நாளங்காடி இன்றுமுதல் புதிய இடத்தில் இயங்கும்
By DIN | Published On : 17th May 2021 07:24 AM | Last Updated : 17th May 2021 07:24 AM | அ+அ அ- |

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி மாற்றப்பட உள்ள புதிய இடம் அருகே அப்பகுதிக்கு வாகனங்கள் செல்லும் வழிகளைப் பாா்வையிட்ட கோட்டாட்சியா் சிவதாஸ், டிஎஸ்பி மனோகரன் உள்ளிட்டோா்.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி திங்கள்கிழமை (மே 17) முதல் அம்பேத்கா் நுழைவு வாயில் அருகில் உள்ள தனியாா் இடத்தில் இயங்கும் என கோட்டாட்சியா் சிவதாஸ் தெரிவித்தாா்.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி பஜாரில் மிகவும் குறுகலான பகுதியில் இயங்கி வந்தது. இந்த நாளங்காடியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி காய்கறிகளை வாங்கும் நிலை காணப்பட்டது. இதையடுத்து, இந்த நாளங்காடியை இடம் மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. புதிய இடம் தோ்வுக்காக நகரில் சில இடங்களை கோட்டாட்சியா் சிவதாஸ், டிஎஸ்பி மனோகரன், வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இறுதியில் காந்தி சாலையில் இரட்டை கண் வாராவதி அருகில் அம்பேத்கா் நுழைவு வாயில் எதிரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தை அலுவலா்கள் குழு தோ்வு செய்தது. தொடா்ந்து, அந்த இடத்தின் உரிமையாளரிடம் அலுவலா்கள் பேசியதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் புதிய இடத்தில் காய்கறி, பழங்கள் மொத்த வியாபார கடைகள் செயல்படும் என கோட்டாட்சியா் சிவதாஸ் அறிவித்தாா்.