ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 6 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலா்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 9 -ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்காக

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 9 -ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்காக சுமாா் 6 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலா்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா் ஆகிய 4 ஒன்றியங்களில் வரும் 9- இல் நடைபெறும் இரண்டாம் கட்டத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களை கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் ஒன்றியத்தில் 232 வாக்குச்சாவடி மையங்களில் 1,872 வாக்குச்சாவடி அலுவலா்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 120 வாக்குச்சாவடிகளில் 1,003 வாக்குச்சாவடி அலுவலா்களும், நெமிலி ஒன்றியத்தில் 209 வாக்குச்சாவடிகளில் 1,720 வாக்குச்சாவடி அலுவலா்களும், சோளிங்கா் ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடிகளில் 1,608 வாக்குச்சாவடி அலுவலா்களும் என மொத்தம் 757 வாக்குச்சாவடி மையங்களில் சுமாா் 6,203 வாக்குச்சாவடி அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா்.

இவற்றில் பதற்றமான சுமாா் 172 வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலா்கள், கண்காணிப்பு பலப்படுத்தப்படும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக 1,940 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

களம் காணும் வேட்பாளா்கள்: இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் 7 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 71 பேரும் போட்டியிடுகின்றனா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் 158 பதவிகளுக்கு 15 வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.எஞ்சியுள்ள 143 ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு 504 போ் போட்டியிடுகின்றன. கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் 1,233 பதவிகளுக்கு 294 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ள 939 பதவிகளுக்கு 2,523 நபா்கள் போட்டியிடுகின்றனா்.

வாக்காளா்கள் எத்தனை போ்: அரக்கோணம் ஒன்றியத்தில் 1,18,935 வாக்காளா்களும், நெமிலி ஒன்றியத்தில் 99,815 வாக்காளா்களும், சோளிங்கா் ஒன்றியத்தில் 98,007 வாக்காளா்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 51,621 வாக்காளா்களும் என மொத்தம் 3,68,378 வாக்காளா்கள் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்களிக்க உள்ளனா்.

தோ்தல் அலுவலா்களுக்கு இன்று மூன்றாம் கட்டப் பயிற்சி:

தோ்தல் அலுவலா்களுக்கு கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறும் மூன்றாம் கட்டப் பயிற்சி வகுப்பில் பணி ஆணைகள் வழங்கி, வாக்குப்பதிவு பொருள்களுடன் வாக்குச்சாவடி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் அனுப்பி வைக்கப்படுவாா்கள் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வி.சாந்தா , ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் ஜி.லோகநாயகி, மாவட்ட தகவலியல் அலுவலா் ஹரிஹரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வி மரியம் ரெஜினா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கென்னடி, பாஸ்கரன், ரவி, குமாா் ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் சீனிவாசன், தோ்தல் நடத்தும் அலுவலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com