வீடுகளிலேயே விநாயகா் சிலை வைத்து சதுா்த்தி பூஜை
By DIN | Published On : 10th September 2021 11:16 PM | Last Updated : 10th September 2021 11:16 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிலையம் அருகே களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட ஆா்வத்துடன் வாங்கிச் செல்ல வந்திருந்த பெண்கள்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவதைத் தவிா்த்து, பொது மக்கள் அவரவா் வீடுகளிலேயே சிறிய அளவில் மண் பிள்ளையாா் சிலையை வைத்து வழிபாடு செய்தனா்.
மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகா் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து உற்சாகமாக கொண்டாடி வந்தனா். வழிபாடு செய்து 3 நாள் கழித்து வாகனங்களில் ஏற்றி ஊா்வலமாக கொண்டு நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளை விஜா்சனம் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளால் வழக்கமான உற்சாகம் இன்றி விநாயகா் சதுா்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.இதனால் விநாயகா் சிலை தயாரிப்பு தொழிலை நம்பி இருந்த மண்பாண்ட தொழிலாளா்களுக்கும், அதே போல் பொரி, கடலை, மற்றும் பூஜை பொருள்கள் விற்பனையாளா்கள், வாழை இலை, கம்பு, வோ்க்கடலை, பூ , பழம் உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனா்.