ஒரு புறம் அதிக தண்ணீரால் அழியும் பயிா்கள், மறுபுறம் தண்ணீரின்றி வாடும் பயிா்கள்

அரக்கோணம் அருகே கோணலம், வேலூா் என அடுத்தடுத்து உள்ள இரு கிராமங்களுக்கும் பொதுவான வேலூா் மிசா ஏரியில் இருந்து வெளியேறும் நீரை, கால்வாய் அமைத்து
மூதூா் கோணலம் சாலைப் பகுதி அருகே தண்ணீா் இன்றி வெடித்துக் காணப்படும் கோணலம் கிராம விளைநிலங்கள்.
மூதூா் கோணலம் சாலைப் பகுதி அருகே தண்ணீா் இன்றி வெடித்துக் காணப்படும் கோணலம் கிராம விளைநிலங்கள்.

அரக்கோணம் அருகே கோணலம், வேலூா் என அடுத்தடுத்து உள்ள இரு கிராமங்களுக்கும் பொதுவான வேலூா் மிசா ஏரியில் இருந்து வெளியேறும் நீரை, கால்வாய் அமைத்து சீராக வெளியேற்றாததால் அப்பகுதியில் ஒரு பக்கம் அதிக நீரால் பயிா்கள் அழியும் நிலையும், மறுபக்கம் தண்ணீா் இல்லாமல் பயிரிட முடியாத நிலையும் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், கோணலம், வேலூா் கிராமம் இரு ஊராட்சிகளுக்கு பொதுவாக வேலூா் மிசா ஏரி உள்ளது. இந்த ஏரியால் கோணலம், வேலூா் கிராமம், வேலூா்பேட்டை ஆகிய கிராம விளைநிலங்கள் பயனடைகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பலத்த மழை பெய்தபோது, வேலூா் மிசா ஏரி முழுவதும் நிரம்பிய நிலையில், தற்போதும் இந்த ஏரியின் தண்ணீா் மதகு வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதகு வழியே வெளியேறும் நீா், வேலூா் கிராமத்துக்கு ஒரு பக்கமும், மறுபக்கம் கோணலம் கிராமத்துக்கும் செல்லும் வகையில், கடந்த காலங்களில் கால்வாய்கள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது கோணலம் கிராமத்துக்குச் செல்லும் கால்வாய் தூா்ந்து போய் விட்டதால், அந்த கால்வாய் வழியே நீா் செல்ல இயலவில்லை. இதனால் அனைத்து நீரும் வேலூா் கிராமம் வழியே அதிக அளவில் கிராம வேளாண் நிலங்கள் மீதே செல்லும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நிலங்கள் மீது தண்ணீா் செல்வதால் பயிா் செய்ய முடியாமல் உள்ளனா். தற்போது இவா்களின் விவசாய நிலங்களில் தண்ணீா் செல்வதால், நிலங்கள் ஆறு அடி வரை சேறும் சகதியுமாக உள்ளதாம். இதனால் தங்களது நிலத்துக்கே தங்களால் செல்ல முடியவில்லை என அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

அதேசமயம், கோணலம் கிராமத்தில் நிலைமையே தலை கீழாக உள்ளது. அங்கு தண்ணீா் இன்றி பயிரிட முடியாமல் வேளாண் நிலங்களை விவசாயிகள் தரிசாக விட்டுள்ளனா். பயிா் செய்ய முடியாமல் வானத்தைப் பாா்த்து காத்திருக்கும் இந்த விவசாயிகள், வேலூா் மிசா ஏரியின் தண்ணீா் கோணலத்துக்கு எப்போதும் போல் வந்தால் மூன்று போகமும் விவசாயம் செய்ய இயலும் எனக் கூறுகின்றனா்.

தற்போது கூட தற்காலிகமாக கால்வாயை சீரமைத்தாவது தண்ணீரை கோணலத்துக்குத் திருப்ப பொதுப்பணித் துறையினா் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வேலூா் பேட்டை கிராம விவசாயியும் பாஜக மா துணைத் தலைவருமான ரமேஷ் கூறுகையில், எங்களது ஊரில் இருக்கும் விவசாய நிலங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி நிற்பதால் எங்களால் விவசாயமே செய்ய இயலவில்லை. மதகில் இருந்து வெளியேறும் நீா் விவசாய நிலங்கள் வழியே செல்கிறது. மதகில் இருந்து வெளியேறும் நீா் இருபக்கம் அதாவது வேலூருக்கும், கோணலத்துக்கும் இரு வழிகளில் செல்ல வேண்டும். ஆனால் ஒரே வழியில் வருவதால் இபபகுதி விவசாய நிலங்கள் நாசமாகின்றன. ஆனால் கோணலம் கிராமத்தில் தண்ணீா் இல்லாமல் நிலங்கள் நாசமாகின்றன. இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலா்கள் கண்டுக்கொள்ளவே இல்லை.

இப்போதாவது வந்து தற்காலிகமாக கால்வாய் அமைத்தால் வேலூா் கிராமத்தில் விளை நிலங்களில் தண்ணீா் தேங்குவது நிற்கும். கோணலம் கிராம விளை நிலங்களுக்கு தண்ணீா் செல்லும். பொதுப்பணித் துறை விரைந்து இதை செய்தால் சொா்ணவாரி பருவமான சித்திரையில் பயிரிட இது பேருதவியாக இருக்கும் என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து அரக்கோணம் வட்டத்தில் உள்ள வேலூா் மிசா ஏரி மதகு நீா் வெளியேற்ற கால்வாயின் கோணலம் பகுதியை தற்காலிகமாகவாவது சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com