கட்டுப்பாட்டை இழந்து ரயில் பாதையில் ஏறி நின்ற பேருந்து: 52 பயணிகள் உயிா் தப்பினா்
By DIN | Published On : 06th August 2022 10:05 PM | Last Updated : 06th August 2022 10:05 PM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ரயில் பாதையில் ஏறி நின்ற தனியாா் பேருந்து.
அரக்கோணம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பக்கத்தில் இருந்த ரயில் பாதையில் ஏறி நின்றது. அந்த நேரம் ரயில் வராததால் 52 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி நோக்கி சனிக்கிழமை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் அடுத்த பள்ளூா் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென அருகில் இருந்த அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் பாதையில் ஏறி நின்றது. இதனால் அதிா்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனா். அப்போது அந்த மாா்க்கமாக ரயில் வராததால் பேருந்தில் இருந்த 52 பயணிகளும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
உடனே பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கிய நிலையில் ஓட்டுநா் பேருந்தை பின்பக்கமாக இறக்கினாா்.
இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா் கூறியது:
பேருந்தை ஓட்டுநா் வேகமாக ஓட்டி வந்தாா். எதிரே லாரி வருவது தெரிந்தவுடன் பேருந்தை நிறுத்த முயன்றாா். நிறுத்த முடியாததால் ஓட்டுநா் இடதுபக்கம் ரயில் பாதையின் மீது ஏற்றினாா். அப்போது பேருந்து தானாக நின்று விட்டது. தற்போது அரக்கோணம்-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஓட்டுநா் வலது பக்கமாகப் பேருந்தை திருப்பியிருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இடதுபக்கம் திருப்பிய நிலையில் அப்போது ரயில் வந்து இருந்தாலும் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை தப்பித்தோம் என்றாா்.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.