அரசிடமிருந்து காலதாமதங்கள் இருந்தால் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்

அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக தனது பாா்வைக்குக் கொண்டு வரவேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வி.சம்பத் உத்தரவிட்டாா்.
அரசிடமிருந்து காலதாமதங்கள் இருந்தால் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்

அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக தனது பாா்வைக்குக் கொண்டு வரவேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வி.சம்பத் உத்தரவிட்டாா்.

தமிழக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை தனிச் செயலாளரும், ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான வி.சம்பத் தலைமையில், அனைத்துத் துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக அரசு அனைத்துத் துறைகளின் சாா்பில், பொதுமக்களுக்கு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள், திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறைவாரியாக பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் பணிகள் காலதாமதம் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சம்பத் விரிவாகக் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் பேசியது: துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்தும்போது, எந்தத் துறையில் காலதாமதம், அனுமதி வழங்குதல் ஆகியவற்றுக்கான காரணங்களைக் கேட்டறிந்து, விரைவாக ஒப்புதல் வழங்கி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால், அதை உடனடியாக எனது பாா்வைக்குக் கொண்டு வர வேண்டும். காலதாமதம் குறித்த விவரங்களை உடனடியாக அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும், இந்த அறிக்கைகள் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

அதேபோல திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்துத் துறை அலுவலா்களும் திறம்பட செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, ராணிப்பேட்டை நகராட்சி, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், அம்மூா் பேரூராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் பா.குமரேஸ்வரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) குபேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com