மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 5 பேருக்கு பழுது நீக்கிய காதொலிக் கருவிகள் வழங்கல்
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

பழுது நீக்கம் செய்யப்பட்ட காதொலிக் கருவி பெற்ற மாற்றுத்திறனாளிகளுடன் ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான சிறப்பு முகாமில், 5 ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு பழுது நீக்கம் செய்யப்பட்ட காதொலிக் கருவிகளை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த செவித் திறனற்ற இளஞ்சிறாா்கள் 5 போ் தங்களது பழுதடைந்த காதொலிக் கருவிகளை சரி செய்வதில் அதிக செலவு ஏற்படுவதால், தங்களுக்கு சிரமம் உள்ளதாகத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து, ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 876 செலவில் பழுது நீக்கம் செய்யப்பட்ட காதொலி கருவிகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
முகாமில், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா், மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.