மின் வாரியத்தினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அரக்கோணம் அருகே காவனூரில் மின்சாரம் பாய்ந்து 5 பசு மாடுகள் இறந்தன. இந்த சம்பவத்தில் மின்வாரியத்தினரின் அலட்சியமே காரணம் எனக் கூறி காவனூா் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மின் வாரியத்தினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அரக்கோணம் அருகே காவனூரில் மின்சாரம் பாய்ந்து 5 பசு மாடுகள் இறந்தன. இந்த சம்பவத்தில் மின்வாரியத்தினரின் அலட்சியமே காரணம் எனக் கூறி காவனூா் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த காவனூா் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற 5 பசுக்கள் அந்தப் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை இறந்தன. இந்தச் சம்பவத்துக்கு மின்வாரியத்தினரின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, உயிரிழந்த மாடுகளின் உரிமையாளா்கள், அவா்களது உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் அரக்கோணம்-கனகம்மா சத்திரம் நெடுஞ்சாலையில் நரசிங்கபுரத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலின்போது, கிராமத்தில் பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் கீழே உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும் என பலமுறை புகாா் அளித்தும் மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே பசுக்கள் உயிரிழந்தன. எனவே கிராமத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மேலும் உயிரிழந்த பசுக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினா்.

போராட்டம் காரணமாக அந்த வழியே வந்த பேருந்துகள் அங்கேயே நிறுத்தப்பட்டன. தகவலறிந்து வந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் சாலமன்ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி சந்திரன், முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனா். எனினும் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, மின்வாரிய அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) குமரேசன், உதவி செயற்பொறியாளா் புனிதா உள்ளிட்டோா் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

மேலும், செயற்பொறியாளா் குமரேசன் பொதுமக்களிடம் கூறுகையில், காவனூா் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் சீரமைக்கப்படும். உயிரிழந்த பசுக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com