ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றுமுதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
By DIN | Published On : 04th January 2022 08:21 AM | Last Updated : 04th January 2022 08:21 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.4) முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,37,597 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், முகாம்களில் வாழும் 380 இலங்கை தமிழா் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதன் படி, பச்சரிசி-ஒரு கிலோ, வெல்லம்-ஒரு கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை-50 கிராம், ஏலக்காய்-10 கிராம், பாசிப்பருப்பு-500 கிராம், நெய்-100 கிராம், மஞ்சள்தூள்-100 கிராம், மிளகாய்தூள்-100 கிராம், மல்லித்தூள்-100 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மிளகு-50 கிராம், புளி-200 கிராம், கடலைபருப்பு-250 கிராம், உளுந்தம் பருப்பு-500 கிராம், ரவை-ஒரு கிலோ, கோதுமை மாவு-ஒரு கிலோ, உப்பு-500 கிராம், முழு கரும்பு, துணிப்பை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன.4 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
மேற்கண்ட தேதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 13 -ஆம் தேதி வழங்கப்படும். மேலும் நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 30.12.2021 முதல் 03.01.2022 வரை வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும். குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172-273166-க்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.