‘குப்பைகளை தரம் பிரித்துத் தராவிட்டால் அபராதம்’
By DIN | Published On : 15th June 2022 11:36 PM | Last Updated : 15th June 2022 11:36 PM | அ+அ அ- |

அரக்கோணம் நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளரிடம் அளிக்கும்போது மக்கா குப்பை, மக்கும் குப்பை ஆகியவற்றை தரம்பிரித்து அளிக்க வேண்டும். தரம் பிரித்து தராவிட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும் என அரக்கோணம் நகராட்சி துப்புரவுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலா் மோகன் கூறியது: தற்போது அரக்கோணம் நகராட்சியில் பெறப்படும் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு, மக்கா குப்பைகளாகவும், மக்கும் குப்பைகளாகவும் தனித்தனியே சேகரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகளான காய்கறி, பழக் கழிவுகள், மீதமான உணவுகள், காய்ந்த மலா்கள், அசைவ கழிவுகள், முட்டை ஓடுகள், தேநீா், காபித்தூள் கழிவுகள், தோட்டக் கழிவுகள் ஆகியவற்றை பச்சை நிறத் தொட்டியில் வைத்து துப்புரவுப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், ரப்பா், உலோக, கண்ணாடி பொருள்கள், கிழிந்த துணிகள், தண்ணீா் பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள், எழுது பொருள்கள், அஞ்சல் உறைகள் ஆகியவற்றை நீலநிற தொட்டியில் வைத்து, துப்புரவுப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பை வகைகளான சானிட்டரிபேட், டயா்கள், வா்ணம் மற்றும் காலி மருந்து டப்பாக்கள், மருந்து மாத்திரைகள், ஊசிகள், பேட்டரிகள் மற்றும் சிஎப்எல் விளக்குகள் ஆகியவற்றை தனியாக வைத்து துப்புரவுப் பணியாளரிடம் அளிக்க வேண்டும்.
இனி குப்பைகளைத் தரம்பிரித்து அளித்தால் மட்டுமே துப்புரவுப் பணியாளா்கள் பெறுவாா்கள். தரம் பிரிக்காமல் அளிக்கப்படும் குப்பைகள் பெறப்பட மாட்டாது. அவ்வாறு தரம் பிரிக்காமல் அளிப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அரக்கோணத்தில் ரத்தன்சந்த் நகா், சோமசுந்தரம் நகா், சிவபாதம் நகா் ஆகிய மூன்று இடங்களில் தரம் பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை உரமாக்கி பொதுமக்களுக்கு விற்க அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் விரைவில் விற்பனை மையம் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.