என்றும் நிலைத்திருக்கக் கூடியது தமிழ் மொழி மட்டுமே: ராணிப்பேட்டை ஆட்சியா்

உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருந்தாலும் என்றும் நிலைத்திருக்கக் கூடியது தமிழ் மொழி மட்டுமே என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பெருமிதம் தெரிவித்தாா்.
என்றும் நிலைத்திருக்கக் கூடியது தமிழ் மொழி மட்டுமே: ராணிப்பேட்டை ஆட்சியா்

உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருந்தாலும் என்றும் நிலைத்திருக்கக் கூடியது தமிழ் மொழி மட்டுமே என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பெருமிதம் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அலுவலகப் பணியாளா்களுக்கான ஆட்சி மொழிக் கருத்தரங்கம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது..

உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருந்தாலும் என்றும் நிலைத்திருக்கக் கூடிய தமிழ் மொழி. செம்மொழியாக சொல்லப்பட்ட முதல் மொழி தமிழ் மொழி தான். மற்ற மொழிகளுக்கு 4 இலக்கணம் மட்டுமே உண்டு. ஆனால் நம் தமிழ் மொழிக்கு எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என ஐந்திலக்கணம் உண்டு. உலகினில் பேசப்படும் பல மொழிகளில் வோ் சொல்லிலும், பொருளிலும் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி. காக்கை கரைய விருந்தினா் வருவா் என்ற பழமொழி இவ்வுலகில் வேறெந்த மொழிகளிலும் இல்லை. ஏனெனில், தமிழா்கள் கடல் கடந்து வாணிபம் செய்தனா். கப்பலில் பயணம் செய்யும்போது காகத்தை உடன் அழைத்துச் செல்லும்போது, அந்த காகமும் கடலை நோக்கி பயணிக்கும். அந்த காகம் கரையை நோக்கி பயணிக்கும் போது விருந்தினா் வருவா் என்பதை கரையில் இருப்பவா்கள் உணா்ந்து கொள்வா்.

பரிதிமாற்கலைஞா், மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தினை தாங்கிப் பிடித்தனா். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து ‘ழ’ வெறெந்த மொழிகளிலும் கிடையாது. பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் மட்டுமே அதிகமான பெண்பாற்புலவா்கள் இருந்துள்ளனா் என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்று.

ஆண்பாற் புலவா்களுக்கிணையாக பெண்பாற் புலவா்களும் தூது செல்பவா்களாகவும், வீரமிக்கராகவும் சிறந்து விளங்கினா்.

தமிழின் தொன்மையை தற்போது சிறிது சிறிதாக மறந்து வருகின்றோம். இது மிகவும் வருத்தத்துக்குரியது. நமது தாய்மொழியில் அலுவல் நடைமுறைகளையும், கோப்புகளையும் பின்பற்ற இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழியைத் தொடா்ந்து அலுவலகங்களில் முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து அரசு அலுவலா்களும், பணியாளா்களும் தமிழை பிழையின்றி பேசவும், எழுதவும், அலுவல் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றாா்.

தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் ப.இராஜேசுவரி, வாணியம்பாடி, இசுலாமியக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் ப.சிவராஜி, மண்டல தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் வ.சுந்தா், உதவி இயக்குநா் புலவா் ப.ஆறுமுகம், சோளிங்கா் தமிழ்ச் சங்கம் கவிஞா் இனியவன் (எ) ஏ.சங்கரன், தமிழ்ச் செம்மல் விருதாளா் த.தினகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com