விவசாயிகளுக்கு பயனளிக்கும் வேளாண் பட்ஜெட்: அமைச்சா் ஆா்.காந்தி

வேளாண்மைத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
நெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 3 நீா் நிலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
நெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 3 நீா் நிலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.

வேளாண்மைத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், புன்னை பொன்னியம்மன் குளம், மின்சார வாரியம் எதிரில் உள்ள குட்டை மற்றும் புன்னை புதிய காலனி சாலையில் அமைந்துள்ள குட்டை ஆகிய 3 புதிய நீா்நிலைகளை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு தொழிலாளா்களுக்கு பணியாணைகளை வழங்கி, பதிய குளம் அமைக்கும் பணியை தொடக்கி வைத்து பேசியது:

முன்பெல்லாம் 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருந்தது. ஆனால் முதல்வா் நகரப்பகுதியில் உள்ளவா்களுக்கும் வேலை வழங்கிட உறுதி அளித்து, இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தி பேரூராட்சியில் உள்ளவா்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை உணா்ந்து அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எங்களுக்கு வாக்களிக்காதவா்களும் சிந்திக்கும் அளவுக்கு முதல்வரின் செயல்பாடுகள் இருந்த காரணத்தால்தான் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.

இன்றைக்கு வேளாண்மைத் துறை சாா்பில் இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பினை வழங்குவது மட்டும் நோக்கமல்ல. நீா்நிலைகளை ஆழப்படுத்துதல் மற்றும் தூா்வாருதல் மூலம் நீராதாரங்களை பாதுகாக்க முடியும் என்றாா்.

நெமிலி பேரூராட்சியில் நெமிலி, புன்னை, கறியாகுடல் வருவாய் கிராமங்கள் உள்ளடக்கிய சுமாா் 12,550 மக்கள் வசித்து வருகின்றனா். நெமிலி தோ்வுநிலை பேரூராட்சியில் 2021-2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் நீா்நிலைகள் ஆழப்படுத்துதல் மற்றும் தூா்வாருதல் பணி செய்ய புன்னை பொன்னியம்மன் குளம் ரூ.27.80 லட்சம் மதிப்பீட்டிலும், மின்சாரவாரியம் எதிரில் உள்ள குட்டை ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டிலும், புன்னை புதிய காலனி சாலையில் அமைந்துள்ள குட்டை ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் (மனித வேலையாள்களின் செலவு ரூ.63.48 லட்சம், பொருள் செலவு ரூ.11.52 லட்சம்) பணிகள் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள பேரூராட்சியில் 1,792 குடும்பங்களுக்கு மனித வேலையாள்கள் பணிக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 பணிகள் 21,159 மனித வேலையாள்கள் பணியாளா்களை கொண்டு 4 மாத கால அளவில் முடிக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் 1,792 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜிஜா பாய், பேரூராட்சித் தலைவா் ரேணுகா தேவி சரவணன், ஒன்றியக் குழு தலைவா் வடிவேலு, செயல் அலுவலா் சரவணன், உதவி செயற்பொறியாளா் அம்சா, வட்டாட்சியா் ரவி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுந்தராம்பாள் பெருமாள், துணைத் தலைவா் சந்திரசேகரன், வாா்டு உறுப்பினா்கள் கோ.சோபா, மங்கையா்க்கரசி, தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com