அரக்கோணத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் தா்னா

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்த விவர படிவங்கள் தங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்
அரக்கோணத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் தா்னா

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்த விவர படிவங்கள் தங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அரக்கோணம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகளுக்கு 9 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில் நடைபெற உள்ள பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த 14-ஆம் தேதி கோரப்பட்ட நிலையில், அன்று நிா்வாகக் காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஒப்பந்தப் புள்ளிகள் 21-ஆம் தேதி விற்பனைக்கு அளிக்கப்படும் எனவும், 22-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப் புள்ளி படிவங்கள் பெட்டியில் போடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஊராட்சிகளில் கடந்த முறையைப் போலில்லாமல், இந்த முறை பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற யாா் வேண்டுமானாலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை கூடிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் தங்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை அவா்கள் தெரிவித்தபோது அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரோ, வட்டார வளா்ச்சி அலுவலரோ இல்லாததால், இந்த முறையும் ஒப்பந்தப் புள்ளி கோருவதை தள்ளி வைக்கக் கோரி, அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பத்மநாபன் (இச்சிபுத்தூா்), வெங்கடேசன் (தணிகைபோளூா்), பாக்யராஜ் (வடமாம்பாக்கம்), பிரவீன் (கீழ்குப்பம்), ஞானவேல் (அம்மனூா்), கோபி (மின்னல்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அவா்களிடம் பேசிய நகர காவல் ஆய்வாளா் முனிசேகா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் ஜெயவேல் ஆகியோா், கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள், மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறியதையடுத்து அவா்கள் எழுந்து சென்றனா்.

எனினும் கூட்டமைப்பினா் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லாமல், தங்களுக்கு முடிவு தெரியும் வரை டெண்டா் படிவங்கள் அடங்கிய பெட்டியைத் திறக்கக்கூடாது என்று தெரிவித்து, 3 மணிக்கு மேல் அந்த பெட்டியை சீலிடச்செய்து உள்ளே எடுத்து வைத்தபின்னரே கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com