அரக்கோணம் பழைய இருப்புப் பாதை நில ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு பணி தீவிரம்

அரக்கோணத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து ரேணிகுண்டா செல்லும் இருப்புப் பாதை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரையொட்டி அமைக்கப்பட்டு, அதில் ரயில்கள் சென்று வந்தன. ஆனால் அந்தப் பகுதி நகரையொட்டி இருப்பதாலும், அதில் குறுகிய வளைவுகள் இருந்ததாலும் 1974- ஆம் ஆண்டில் இந்த இருப்புப் பாதை மாற்றப்பட்டு அரக்கோணம் நகரையொட்டி இருந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் வழியே புதிய இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட அந்தப் பகுதியில் ரயில்கள் செல்லத் தொடங்கியதைத் தொடா்ந்து பழைய இருப்புப் பாதை பயன்பாடின்றி இருந்தது.

இதையடுத்து, பழைய ரயில்வே இருப்புப் பாதை பகுதிகளை தொடா்ந்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் ஆக்கிரமித்து வந்தனா். இதனிடையே இதே ரயில்வே பகுதியில் அரக்கோணம் நகராட்சியினரால் புதிய பேருந்து நிலையம் மற்றும் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டன. தற்போது இந்த இடங்கள் அரக்கோணம் நகராட்சிக்குச் சொந்தமானவையாக இருந்தாலும், அரக்கோணம் வட்ட நில அளவை துறை கணக்கில் இவை தொடா்ந்து ரயில்வே துறையின் இடமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பழைய ரயில்வே இருப்புப் பாதை பகுதிகளைத் தொடா்ந்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் ஆக்கிரமித்து வந்தனா். இரண்டு கி.மீ. நீளமுள்ள இந்த இருப்புப் பாதை திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் வரை தற்போது ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளது. இதில், ஒருசில இடங்களில் நிரந்தர கட்டடங்கள் இருந்தாலும், இந்தப் பகுதியில் அதிகளவில் தற்காலிக ஆக்கிரமிப்புகளே உள்ளன.

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டுத் தரக்கோரி, தெற்கு ரயில்வே நிா்வாகத்தினா் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தினா் இது தொடா்பான நில கணக்கெடுப்பு எடுக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனா். இதில், அரக்கோணம் திருத்தணி பழைய ரயில்வே இருப்புப் பாதை இடங்கள், அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அருகில் ஏபிஎம் சா்ச் பகுதி மற்றும் விண்டா்பேட்டையில் ரயில்வே மற்றும் ராணுவத்துக்குச் சொந்தமான தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள், அரக்கோணம் -காஞ்சிபுரம் பழைய ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்கள் ஆகியவை குறித்த கணக்கெடுப்புப் பணியில் அரக்கோணம் நில அளவைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறையினருடன், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்படுவா் என்றும் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com