மத்திய அரசில் 20,000 காலிப் பணியிடங்கள்: காஞ்சிபுரத்தில் இலவசப் பயிற்சிக்கு ஏற்பாடு
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

மத்திய அரசில் 20,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருப்பதால், விண்ணப்பிக்கத் தெரியாதவருக்கு விண்ணப்பிக்கவும், இலவசப் பயிற்சிக்கும் ஏற்பாடுகள் செய்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியது:
மத்திய அரசில் உதவி தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா் உள்பட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் 20,000 போ் விரைவில் தோ்வு செய்யப்பட உள்ளனா். பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும் வயது 18 முதல் 27 வரையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வரும் அக்டோபா் மாதம் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கத் தெரியாதவா்களுக்கு விண்ணப்பிக்கவும், இலவசப் பயிற்சிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்டேட் வங்கியில் 5,926 காலிப் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகும். வயது 20 முதல் 28 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடத்துக்கு இந்த மாதம் 27-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக இருந்தாலும், இப்பணியிடங்களுக்கான பயிற்சி இலவசமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு போட்டித் தோ்வுகளுக்கும் விண்ணப்பிப்போரில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினத்தவருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வு உள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெற விரும்புவோா் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், கல்விச் சான்றுகள் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.