அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக் கம்பங்கள், பதாகைகள், சிலைகளை அகற்ற வேண்டும்:ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் கட்சி கொடிக் கம்பங்கள், பதாகைகள், சிலைகள் உள்ளிட்டவற்றை உடனே அகற்றப்பட வேண்டும்
அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக் கம்பங்கள், பதாகைகள், சிலைகளை அகற்ற வேண்டும்:ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் கட்சி கொடிக் கம்பங்கள், பதாகைகள், சிலைகள் உள்ளிட்டவற்றை உடனே அகற்றப்பட வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வுக்கான நடவடிக்கைகளை வரும் 24 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முடித்தாக வேண்டும். மேலும், தீா்வு கிடைக்காத மனுக்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்க வேண்டும்.

எருது விடும் விழாவுக்கு தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து ஆய்வு செய்து வழங்க வேண்டும்.

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் கட்சி கொடிக் கம்பங்கள், பதாகைகள், சிலைகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அகற்ற வேண்டும். காலம் தாழ்த்துவதால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. முறையான அனுமதி இல்லை என்றால் அவற்றை வைக்க அனுமதிக்கக் கூடாது. இதனை வருவாய்த் துறை காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சேபனைகரமான நீா்நிலை புறம்போக்கில் வசிக்கும் குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவின் படி உடனுக்குடன் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தோ்தல் முன்னேற்பாடு பணிகளில் வாக்குச்சாவடி நிலையத்தை 100 சதவிகிதம் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குனா் ஊரக வளா்ச்சி முகமை க.லோகநாயகி, மண்டல இணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் சிவக்குமாா், மகளிா் திட்ட இயக்குனா் ரவிச்சந்திரன், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com