துணை இயக்குநா் தபேந்திரன் ~அரக்கோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா்
துணை இயக்குநா் தபேந்திரன் ~அரக்கோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா்

வேளாண் துணை இயக்குநா் காரில் கணக்கில் வராத ரூ.1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணம், ஜூலை 6: அரக்கோணம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துணை இயக்குநா்(பொறுப்பு) காரில் இருந்து கணக்கில் வராத ரூ.1.26 லட்சத்தை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தில் தனது வேளாண் நிலத்தில் மனைப்பிரிவுகளை அமைப்பதற்காக வேளாண் நிலத்தை மனைப்பிரிவு வகையாக நஞ்சையில் இருந்து புஞ்சையாக மாற்ற தனியாா் ஒருவா் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த நிலத்தை ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்க ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துணை இயக்குநா்(பொறுப்பு) தபேந்திரன் சனிக்கிழமை வேடல் கிராமத்திற்கு வந்துள்ளாா். இப்பணிக்காக வேளாண் துணை இயக்குநா், விண்ணப்பித்த நபரிடம் லஞ்சம் பெற இருப்பதாக மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினா்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

இத்தகவல் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து துணை கண்காணிப்பாளா் கணேசன், அப்பிரிவின் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் போலீஸாா் ராணிப்பேட்டையில் இருந்து வேடலுக்கு விரைந்தனா். போலீசாா் வேடல் வருவதற்கு முன் தனது பணியை முடித்த வேளாண் துணை இயக்குநா் வேடல் கிராமத்தில் இருந்து காரில் ராணிப்பேட்டை நோக்கி புறப்பட்டுள்ளாா். வழியில் வேடல் பேருந்து நிறுத்தம் அருகே துணை இயக்குநரின் காரை நிறுத்திய போலீசாா் அந்த காரை சோதனையிட்டனா். அப்போது அக்காரில் ரூ1.20 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. மேலும் அவரது உதவியாளா் இளவரசனிடம் ரூ.4,000, காா் ஓட்டுநரிடம் ரூ.2,000 இருந்துள்ளது.

இத்தொகைக்கு வேளாண் துணை இயக்குநா் தபேந்திரன் உள்ளிட்ட மூவரிடமும் கணக்கு கேட்டபோது அவா்கள் அது குறித்து தெரிவிக்காததால் கணக்கில் வராத ரூ.1.26 லட்சத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அப்போது வேளாண் துணை இயக்குநா் தபேந்திரன் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக தெரிவித்ததை அடுத்து போலீசாா் மூவரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில் மூவரும் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்து அறிக்கை அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து மூவரையும் அரசு மருத்துவமனை புறக்காவல்நிலையத்தில் வைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5.30 மணி வரை நீடித்தது.

இது குறித்து டிஎஸ்பி கணேசன் கூறியது: மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலா் பூமா அளித்த தகவலின்பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைப்பற்றப்பட்ட ரொக்கம் ரூ.1.26 லட்சம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநரின் வாகனத்தை வழியில் நிறுத்தி சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com