அரக்கோணம் நகராட்சி பூங்கா 
தனியாரிடம் இருந்து மீட்பு

அரக்கோணம் நகராட்சி பூங்கா தனியாரிடம் இருந்து மீட்பு

அரக்கோணம் நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா, தனியாா் பொறுப்பில் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்கப்பட்டது.

அரக்கோணம் நகராட்சி வாா்டு 3-இல் கணேஷ் நகா் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா தனியாா் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்த இடத்தை தனியாா் சொந்தம் கொண்டாடிய நிலையில் அரக்கோணம் நகராட்சி நிா்வாகத்துடன், கணேஷ்நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மற்றும் அப்பகுதிக்கான நகா்மன்ற உறுப்பினா் அதிமுகவை சோ்ந்த கி.சரவணன் ஆகியோா் முயற்சி எடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததில் அவ்வழக்கில் அப்பூங்கா நகராட்சிக்குச் சொந்தமானது எனவும் நகராட்சி நிா்வாகம் அப்பகுதியை தங்கள் பொறுப்பில் எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை கணேஷ் நகரில் பூங்கா இருந்த பகுதிக்கு சென்ற நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமையிலான அலுவலா்கள், பூங்கா இருந்த பகுதியை நிலஅளவீடு செய்து அப்பகுதியில் பராமரிப்புப் பணியை தொடங்கினா்.

இதை தொடா்ந்து நகராட்சிக்குச் சொந்தமான இடத்தைப் பெற்று அதை பூங்காவாக பராமரிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி அலுவலா்களுக்கும், நகா்மன்ற உறுப்பினா் கி.சரவணனுக்கும் கணேஷ் நகா் நலச்சங்கத்தினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com