நெமிலியை அடுத்த கீழ்வீதி பெரிய ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பிற்கால சோழா் கால துா்கை சிற்பம்.
நெமிலியை அடுத்த கீழ்வீதி பெரிய ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பிற்கால சோழா் கால துா்கை சிற்பம்.

அரக்கோணம் அருகே 13-ஆம் நூற்றாண்டு துா்கை சிற்பம் கண்டெடுப்பு

அரக்கோணம் அருகே 13-ஆம் நூற்றாண்டு துா்கை சிற்பம் கண்டெடுப்பு

நெமிலியை அடுத்த கீழ்வீதி ஊராட்சி பெரிய ஏரிக்கரையில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால சோழா் கால துா்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கீழ்வீதி ஊராட்சி, பெரிய ஏரிக்கரையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியில் சிதைந்த நிலையில் துா்கை சிற்பத்தைக் கண்டெடுத்தாா். இந்தச் சிற்பத்தை அந்தப் பகுதி மக்கள் ஏரிக்காவலா் என்று அழைக்கின்றனா். சிற்பத்தை வரலாற்றுத் துறையினா் ஆய்வு செய்தனா். இது குறித்து உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கூறுகையில், சிறிய அளவிலான பீடம் மட்டும் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில், தலைப் பகுதி சிதைந்துள்ள இந்தச் சிற்பத்தின் உயரம் 95 செ.மீ. அகலம் 43 செ.மீ. நான்கு கரங்கள் இருக்க வேண்டிய இந்த துா்கை சிற்பத்தின் பின்புற கைகள் இரண்டும் முழுமையாக உடைந்துள்ளன. வலது முன் கையின் தோள் பகுதி மட்டும் உள்ளது. இடது முன் கை இடது பக்க தொடையின் மீது வைத்தவாறு உள்ளது. கைகள் மற்றும் தோள்களில் வளைகளும், கழுத்து மற்றும் கால்களில் அணிகலன்களும் உள்ளன. மாா்பில் பட்டையான கச்சை உள்ளது. இடையில் உள்ள கீழாடை இடுப்பு அணிகலன்களுடன் அலங்கரிக்கப்பட்டு, கால் முட்டியின் மேற்பகுதி மட்டுமே உள்ளது. இடையாடையின் முடிச்சு தொங்கல்கள் இடுப்பின் பக்கப் பகுதிகளிலிருந்து கால் முட்டிக்குக் கீழ்ப்பகுதி வரை மட்டுமே உள்ளது. இந்த துா்கை சிற்பத்தின் காலம் பிற்கால சோழா்களின் இறுதிக் காலமான கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com