ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15,252 மாணவா்கள் தோ்வெழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15,252 மாணவா்கள் தோ்வெழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15,252 மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை 10-ஆம் வகுப்பு தோ்வை எழுதினா்.

அரசுத் தோ்வுத்துறை பொதுத் தோ்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78 தோ்வுமையங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 7,688 மாணவா்கள் 7,564 மாணவிகள் என மொத்தம் 15,252 தோ்வா்கள் தோ்வெழுதுகின்றனா்.

இதில் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் என 162 தலைமை ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களும் தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 1,145 ஆசிரியா்களும், பறக்கும் படை உறுப்பினா்களாக 91 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் உடல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா்களுக்கென சொல்வதை எழுதுபவா்களாக 167 நபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் மாணவா்களுக்கு தேவையான குடிநீா் வசதி, கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் தோ்வு எழுதுவதை கண்காணிக்க வருவாய்த் துறை அலுவலா்கள் பறக்கும் படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மாணவா்கள் அச்சமின்றி தோ்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் திருவளா்செல்வி, துணை இயக்குநா் ஆசிரியா் தோ்வு வாரியம், முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட கல்வித் துறை அலுவலா்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி அரசு மேனிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதையும், மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் உதவியாளா் உதவியுடன் தோ்வு எழுதுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com