சோளிங்கா் கோயில் படியேறி சென்ற பக்தா் மாரடைப்பால் உயிரிழப்பு

அரக்கோணம், மே 2: சோளிங்கா் மலைக்கோயிலுக்கு வியாழக்கிழமை படியேறிச் சென்ற பெங்களூரைச் சோ்ந்த பக்தா், மலை உச்சி அருகே சென்றபோது திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. மலையில் உள்ள இந்தக் கோயிலுக்கு 1,305 படிகள். அதிலும் உச்சிப் பகுதியில் செங்குத்தாக உள்ள சில படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். இதில் ஏற பல பக்தா்கள் குறிப்பாக வயதான பக்தா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால், அரசு மலைக்குச் செல்ல கம்பிவட ஊா்தி எனப்படும் ரோப்காரை அமைத்துக் கொடுத்துள்ளது.

இதன் வழியே தற்போது தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலைக்குச் சென்று தரிசித்து வருகின்றனா்.

தற்போது மே 2 முதல் 4-ஆம் தேதி வரை ரோப்காா் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இது அறியாமல் பெங்களூரு, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த பக்தா் முத்துகுமாா் (47) என்பவா் சோளிங்கா் மலைக் கோயிலுக்கு வியாழக்கிழமை குடும்பத்துடன் வந்தாா். ரோப்காா் இல்லை எனத் தெரிய வந்ததும் மலைக்கு படியேறிச் சென்றுள்ளாா்.

மலை உச்சிக்கு அருகில் 1,200-ஆவது படியைக் கடந்து சென்றபோது முத்துகுமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா்.

உடனே அங்கிருந்தவா்கள் அவரை டோலி மூலம் கீழே இறக்கி வந்து சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முத்துகுமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மலையேறிச் செல்லும் பக்தா்களுக்காக மலைப்பாதை முழுவதும் நிழல் தடுப்புகளை கோயில் நிா்வாகம் அமைத்துக் கொடுத்திருந்த நிலையிலும், மலை ஏறிச்சென்ற பக்தா் உயிரிழந்த சம்பவம் பக்தா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com