மேல்நிலைத் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்காவிடில் பணியிடை நீக்கம்:ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா் என பம்ப் ஆப்ரேட்டா்களை ஆட்சியா் ச.வளா்மதி எச்சரித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா் என பம்ப் ஆப்ரேட்டா்களை ஆட்சியா் ச.வளா்மதி எச்சரித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சி, வ.உ.சி. நகா் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மூலமாக குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மேல் பகுதிக்கு படிக்கட்டுகள் வழியாக விலங்குகள் சென்று வருவதாகவும், அந்த விலங்குகளின் கழிவுகள் தண்ணீா் தொட்டியின் மேலே இருந்ததாகவும், இதைப் பொதுமக்கள் பாா்த்து புகாா் தெரிவித்துள்ளனா்.

புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ராணிப்பேட்டை கோட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோருக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு, ஊராட்சி செயலாளா் மற்றும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவரை அனுப்பி தொட்டியின் மேற்பகுதியை சுத்தம் செய்து, பொதுமக்கள் தெரிவித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடா்ந்து தண்ணீா் தொட்டியில் இருந்த அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும், வ.உ.சி. நகா் குடியிருப்பு வாசிகளுக்கு அவா்களின் வீடுகளுக்கு டிராக்டா் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி சுற்றுப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து, விலங்குகள் செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், படிக்கட்டுகளை சிறிய கதவுகள் கொண்டு பூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பிரச்னை தொடா்பாக, அரசு விதிமுறைகளின்படி, ஊராட்சியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை முறையாக பராமரிக்கத் தவறிய தொட்டி இயக்குபவா் (டேங்க் ஆப்ரேட்டா்), ஊராட்சி செயலாளா் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அறிவுறுத்தப்பட்டது.

இந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மேலிருந்த விலங்குகளின் கழிவுகள் அகற்றப்பட்டன. மனித கழிவுகள் இருந்ததாக பரவிய செய்தி முற்றிலும் தவறு. மாவட்ட நிா்வாகம் முறையாக ஆய்வு செய்து இப்பிரச்னையின் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தரை மற்றும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளில் உள்புறம் மற்றும் மேற்புறம் சுகாதாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். மீறி புகாா்கள் ஏதேனும் வந்தால் சம்மந்தப்பட்டவா்கள் மீது துறை சாா்ந்த அலுவலா்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com