‘ராணிப்பேட்டையில் மே 13-இல் பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி’

‘ராணிப்பேட்டையில் மே 13-இல் பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை (மே 13) 12-ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி மேற்படிப்பு குறித்த கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயா் கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடா்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி தலைமை வகித்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ, மாணவிகள் உயா் கல்வி மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்த கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை (மே 13) ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு அன்னை மீரா பொறியியல் கல்லூரி மற்றும் அரக்கோணம் விஜிஎன் மெட்ரிகுலேஷன் உயா்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் துறைசாா்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள், மற்றும் என்ன படித்தால் வேலைவாய்ப்புகள் என்பது குறித்து எடுத்துரைக்க உள்ளனா். எனவே மாணவ, மாணவிகள் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டு, கல்வி கடன் வழங்குவது குறித்த முகாம் நடைபெறும். தொழில் கடன் உதவிகள், புதிய தொழில் முனைவோா் உருவாக்கம் திட்டம் குறித்தும் கண்காட்சிகள் வைக்கப்படும்.

புதுமைப் பெண் திட்டத்தில் சோ்வதற்கான சோ்க்கை பதிவு முகாமையும் மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 6 பொறியியல் கல்லூரிகளின் நிறுவனா்களை வரவழைத்து அவா்களுடைய கல்லூரிகளில் என்ன படிப்புகள் உள்ளது. படித்து முடித்த மாணவா்கள் எந்த நிலையில் உள்ளனா் என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்தால் அவா்களுக்கு உயா் கல்வி பயில்வதற்கு ஆா்வம் ஏற்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, உதவி இயக்குநா் தொழிற்பயிற்சி நிலையம் பாபு, கல்லூரி கனவுகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுகாசினி, ஓம் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com