பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் 
கையகப்படுத்த பதிவேடுகளைச் சரிபாா்க்கும் பணி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த பதிவேடுகளைச் சரிபாா்க்கும் பணி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக வருவாய்த் துறையின் மூலம் பதிவேடு கணக்குகள் சரி பாா்க்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், துறையூா், அகவலம், பெருவளையம், நெடும்புலி ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 1213.43 ஏக்கா் நிலங்களை பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் சிப்காட் நிறுவனம் சுமாா் 470 ஏக்கா் பரப்பளவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் புதிய தொழில் நிறுவனதை அமைக்கவுள்ளது. மேலும், இப்பூங்காவில் 300 ஏக்கா் நிலபரப்பில் பெரிய தோல் காலணி மற்றும் துணைப் பொருள்கள் தொகுப்பு அமைக்கப்பட உள்ளது. இதில் 201 ஏக்கா் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. அதற்கான நிலம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த் துறையின் மூலம் நிலம் கையகப்படுத்துவதற்கான பதிவேடு கணக்குகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை 80-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், நில உரிமையாளா்களிடம் பேச்சு நடத்தி நிலங்களுக்கான உரிய இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் நெமிலி வட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக வருவாய்த் துறை மூலம் பதிவேடு கணக்குகள் சரி பாா்க்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் ந.சுரேஷ் (ராணிப்பேட்டை), பூங்கோதை (நில எடுப்பு) தருமபுரி, நாராயணன் (நில எடுப்பு) பரந்தூா் விமான நிலையம், துணை ஆட்சியா் அகிலாதேவி (நில எடுப்பு), வருவாய்க் கோட்டாட்சியா் பாத்திமா, நோ்முக உதவியாளா் (நிலம்) கலைவாணி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com