திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரா் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா
அரக்கோணத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் ஸ்ரீதிருமாலீஸ்வரா் கோயில் மண்டலாபிஷேகம் 48-ஆம் நாள் பூா்த்தி நிறைவு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை பொன்னிறம் கொண்ட ஸ்ரீதிருமாலீஸ்வா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இக்கோயிலில் தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் 48-ஆவது நாள் பூா்த்தி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு சனிக்கிழமை முதல்கால 108 கலச பூஜை, 108 சங்கு பூஜை, பரிவார சுவாமிகளுக்கு கலச பூஜை, வேதிகாா்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கணபதிபூஜை, சோமபூஜை சிவபெருமானுக்கு 108 கலச பூஜையும், ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 சங்கு பூஜையும் திருமாலுக்கு 9 கலச பூஜையும் பரிவார சுவாமிகளுக்கு கலச பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து சகல தேவதா ரக்ஷாபந்தன விசா்ஜனம் பரிவார சுவாமிகளுக்கு கலசாபிஷேகமும், கலச புறப்பாடும், திருமாலீஸ்வரருக்கு 108 கலச அபிஷேகமும், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும், திருமாலுக்கு 9 கலச அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி குமரவேல், தலைமையில் திருமாதலம்பாக்கம் கிராம மக்களும், கிரியா குரு மற்றும் கோயில் ஸ்தானீகம் சத்யோஜாத டி.எம்.சம்பு சிவாச்சாரியாா், வித்யாநிதி எஸ்.மணிகண்டசிவா சிவாச்சாரியாா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்களும் இணைந்து செய்திருந்தனா்.