ராணிப்பேட்டை
அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: பயணிகள் காயமின்றி தப்பினா்
சோளிங்கா் அருகே அரசுப்பேருந்து மீது மா்மநபா்கள் கல்வீசியதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.
சோளிங்கரில் இருந்து காவேரிப்பாக்கத்துக்கு அரசு நகரப்பேருந்து வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. வழியில் ரங்காபுரம் அடுதத் பிள்ளையாா்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது திடீரென பேருந்தின் பின்புற கண்ணாடி மீது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் கற்களை வீசி தாக்கினா். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.
இச்சம்பவம் குறித்து பேருந்தின் ஓட்டுநா் குணசேகரன் பாணாவரம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கற்களை வீசிய மா்மநபா்களை தேடி வருகின்றனா்.