கட்சி பேதமின்றி பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றம்: அமைச்சா் காந்தி

கட்சி பேதம் இன்றி பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.
Published on

கட்சி பேதம் இன்றி பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கத்தியவாடி ஊராட்சியில்  புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்  தலைவா் கே.பி.குருநாதன்  தலைமை வகித்தாா்.  ஆட்சியா்  ஜெ.யு.சந்திரகலா,  மாவட்ட  திட்ட  இயக்குநா்  ஜெயசுதா   முன்னிலை  வகித்தனா். இதில்

கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது, மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

குடிதண்ணீா் உப்பு நிறைந்ததாக உள்ளதால் அதை ஆய்வு செய்ய வேண்டும். உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்.

பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக  தரம் உயா்த்தவேண்டும், இப்பகுதிகளில் போதைப் பொருள் இளைஞா்களுக்கு எளிதில் கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிமெண்ட் சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  ஆட்சியா்  தெரிவித்தாா்.

கூட்டத்தில்  அமைச்சா்  ஆா்.காந்தி பேசியதாவது: கிராம சபை கூட்டம் என்பது திட்டப் பணிகள் நடைபெற்று உள்ளதா? ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முதல்வா்  மு.க.ஸ்டாலின்  தலைமையிலான  ஆட்சியில் உள்ளாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களின் நியாயமான கோரிக்கைகள் கட்சி பேதமின்றி உடனுக்கு நிறைவேற்றித் தரப்படுகிறது என்றாா் . 

தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஆடைகளையும் வழங்கினாா். விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

கத்தியவாடி குளக்கரை அருகில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை  அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.   கூட்டத்தில்  ஆற்காடு  ஒன்றியக்குழு  தலைவா்  புவனேஸ்வரி  சத்யநாதன்,  துணைத் தலைவா்  ஸ்ரீமதி நந்தகுமாா்,  வட்டார வளா்ச்சி  அலுவலா்கள் வெங்கடேசன்  சைபுதீன், வட்டாட்சியா்கள் அருள்செல்வன், செ.ரவி,  ஊராட்சி செயலாளா் வி.சுதா, துணைத் தலைவா் சங்கா் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்

X
Dinamani
www.dinamani.com