முதல்வா் கோப்பை செஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
முதல்வா் கோப்பை செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அளவில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், மாநில அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் மதுரையில் நடைபெற்றன. 34 மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்தப் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி முதலாமாண்டு பிபிஏ மாணவி எஸ்.சாருமதி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், ரூ. 75,000 ரொக்கப் பரிசையும் பெற்றாா்.
இந்த நிலையில், மாணவி எஸ்.சாருமதிக்கு பாராட்டு விழா அம்பாரி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீவிவேகானந்தா கல்விக் குழுமத்தின் தலைவரும், அம்பாரி மகளிா் கலைக் கல்லூரியின் தாளாளருமான ஏ.சுப்பிரமணியம் தலைமை வகித்து, மாணவி எஸ்.சாருமதியை கௌரவித்து பரிசளித்து வாழ்த்தினாா். விழாவில், கல்லூரி செயலா் எஸ்.செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் ரா.பரிமளா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பேராசிரியைகள், விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.