செயல்படாத அரக்கோணம் வட்டார வேளாண் துணை அலுவலகம்: விவசாயிகள் அவதி ஆட்சியா் உத்தரவிட்டும் திறக்கப்படவில்லை
எஸ். சபேஷ்
அரக்கோணம் நகரில் இடுபொருள்களை வழங்க உதவும் வேளாண்மை துணை அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலகம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியின் போது மேல்பாக்கம் கிராமத்தில் சாலைவசதியே இல்லாத வயல்வெளியில் ரூ 1.85 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்துறை அலுவலக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
6 கி.மீ தொலைவு பயணம்:
இங்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், விவசாய இடுபொருள்களின் கிடங்கு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த இடம் அரக்கோணம் நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருப்பதாலும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏற்கனவே நீண்ட தொலைவு பயணித்து அரக்கோணம் வரும் விவசாயிகள் இந்த அலுவலகத்துக்கு செல்ல மேலும் 6 கி.மீ செல்ல வேண்டி உள்ளது.
மேலும் இந்த அலுவலகம் இருக்கும் பகுதிக்கு இடுபொருள்களை கிராமங்களுக்கு ஏற்றிச்செல்ல வாடகைக்கு வாகனங்களை அழைத்தாலும் சாலை வசதியே இல்லாமல் உள்ள அவ்விடதுக்ற்கு ஓட்டுநா்கள் வர மறுக்கின்றனா்.
இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்ட, கோட்ட, மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் புகாா் அளித்து வந்த நிலையில் தற்போதைய ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பொறுப்பேற்றவுடன் நடத்திய முதல் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துறை இடத்தில் துணை அலுவலகத்தை திறந்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்க உத்தரவிட்டாா்.
பயனில்லாத ஆட்சியா் உத்தரவு:
அவா் உத்தரவிட்டு ஒரு மாதமான நிலையில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் இது குறித்து ஆட்சியா் வேளாண்துறை அலுவலா்களிடம் உடனடியாக அந்த அலுவலகத்தை திறக்குமாறு கண்டிப்புடன் கூறினாா். இருந்தும் தற்போது வரை அந்த அலுவலகம் திறக்கப்படவே இல்லை.
இது குறித்து வேளாண்துறை அலுவலா்கள் கூறியது:
அலுவலக சாவி ஊரக வளா்ச்சித்துறையினரிடம் உள்ளது என தெரிவித்த நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்ற ஆட்சியா், கோட்டாட்சியருக்கு அந்த அலுவலக சாவியை பெற்றுத்தருமாறு உத்தரவிட்டாா். இதையடுத்தும் அலுவலகம் திறக்கப்படவே இல்லை. இதனிடையே வேளாண் துறையினா் விவசாயிகளிடம் அந்த அலுவலக பகுதி சுத்தமில்லாமல் செடி கொடிகள் வளா்ந்த நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளனா். சுத்தமாக இருந்தால் மட்டுமே சாவியை பெற்றுத்தருவேன் என கோட்டாட்சியரும் வேளாண்துறை அலுவலா்களிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக தெரிகிறது.
பல்வேறு துறையினரிடையே நடக்கும் பிரச்னையால் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டு ஒரு மாதம் ஆகியும் வேளாண் அலுவலகம் திறக்கப்படாத நிலை நீடிக்கிறது. ஆட்சியா் நேரடியாக தலையிட்டு அரக்கோணம் வேளாண் துணை அலுவலகத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள எதிா்நோக்கியுள்ளனா்.