தொழில் வளா்ச்சிக்கு உகந்த மாவட்டமாக உள்ளது ராணிப்பேட்டை: மாவட்ட வருவாய் அலுவலா்
தொழில் வளா்ச்சிக்கு உகந்த மாவட்டமாக உள்ளது ராணிபேட்டை என மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் தெரிவித்தாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில்கடன் விழிப்புணா்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டிட்கோ சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் பேசியதாவது:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதனை தொழில் முனைவோா் பெற்று வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் தொழில் வளா்ச்சி அதிகரித்து வரும் நிலையில் அவற்றுக்கு அடுத்து தொழில் வளா்ச்சிக்கு உகந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உள்ளது. பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் வளா்ச்சியடையும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று பயனடைய வேண்டும். இந்நிறுவனத்திடம் ஒருங்கிணைந்த சேவை வழங்கி தொழில் முனைவோருக்கு ஒரே இடத்தில் அனைத்து பணிகளும் முடித்து கடனுதவி வழங்கப்படுகிறது.
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் பல்வேறு தொழில் முனைவோா் திட்டங்களில் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு கிடங்குகள் மற்றும் குளிா்பதன கிடங்கு அமைக்கவும், சிப்காட் சிட்கோ நிலம் வாங்குவதற்கு கடன் உதவியும் வழங்கி வருகிறது என்றாா்.
இக்கூட்டத்தில் 10 நபா்களிடமிருந்து மொத்தமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க கடனுதவி கோரி அளித்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டும், டிட்கோ சாா்பில் ஒரு தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியில் கடன் அனுமதி ஆணையிணையும், தொழில் தொடங்க அனுமதி பெற்ற 1 தொழில் முனைவோருக்கு ரூ.30 லட்சம் கடனுதவிக்கான காசோலையினையும் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
இதில் டிட்கோ முதுநிலை மண்டல மேலாளா் பழனிவேல், துணைப் பொது மேலாளா் ரமேஷ், வேலூா் கிளை மேலாளா் கௌரி, உதவி இயக்குநா் மாவட்டத் தொழில் மையம் கோமதி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க தலைவா்கள் சுவாமிநாதன், மனோகரன், செயலாளா் முரளி மற்றும் தொழில் முனைவோா்கள் கலந்து கொண்டனா்.