செங்கல் சூளைக்கு கொண்டு செல்லப்படும் ஏரி மண்: விவசாயிகள் பாதிப்பு
எஸ். சபேஷ்.
அரக்கோணம் அருகே வேளாண் பணிக்காக ஏரியில் மண் எடுக்க அரசு அனுமதி பெற்றவா்கள், அந்த மண்ணை செங்கல் சூளை தேவைக்கு கொண்டு செல்வதால் அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா். அந்த ஏரி மண்ணை தங்கள் விவசாய நிலங்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
அரக்கோணம் அருகே நெமிலி வட்டத்துக்குட்பட்ட சிறுணமல்லி ஊராட்சியில் உள்ள ஏரியில் இருந்து வேளாண் பணிகளுக்கு மண் எடுத்துக்கொள்ள நெமிலி வட்ட வருவாய்த் துறையினா் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாள்களாக சிறுணமல்லி ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஏரியில் இருந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் அள்ளப்பட்டு 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மண் தங்களது நிலத்துக்கு விவசாய பணிகளுக்கு தேவை என பலா் நெமிலி வட்ட அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் சம்பத்ராயன் பேட்டையில் செங்கல்சூளை வைத்துள்ளவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து வேளாண்மைக்காக என அனுமதி பெற்றுவிட்டு, ஏரியை ஆழப்படுத்தி எடுக்கும் அத்தனை லாரி மண்ணையும் செங்கல் சூளைக்கே கொண்டு செல்வதாகவும் இதனால் ஏரி அதிகளவு ஆழமாகி விட்ட நிலையிலும் மண் எடுக்கும் பணி நிறுத்தப்படவில்லை. மேலும் இந்த மண்ணை தங்களது வயலுக்கு அளிக்குமாறு சம்பத்ராயன்பேட்டை விவசாயிகள் கோரிய நிலையிலும் அனுமதி பெற்றோா் செங்கல் சூளைக்கு மண் எடுக்கத்தான் அனுமதி பெற்ாகவும் வேளாண் பணிக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்து விட்டதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலருக்கும், நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்த நிலையிலும், வேளாண் அனுமதி பெற்று செங்கல் சூளைக்கு மண் எடுத்துச் செல்லும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே வருவாய்த் துறையினா் இதை தடுத்து நிறுத்தி ஏரிமண்ணை வேளாண் பணிகளுக்கு மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கும் படியும் மற்ற வணிக பணிகளுக்கு மண் எடுத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சம்பத்ராயன்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.