2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
செங்காடு ஊராட்சியில் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில்,தூய்மை சேவை திட்டத்தில் 288 கிராமங்களை தூய்மையாக பராமரிக்கவும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க மரச் செடிகளை நடவும், நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, வாலாஜா ஒன்றியம், செங்காடு ஊராட்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது,.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டாா். தூய்மையே சேவை திட்டத்தின் மூலம் கிராமத்தில் சுகாதாரத்தை காப்பது குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
விழிப்புணா்வு உறுதிமொழியை ஊா் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் எடுத்துக் கொண்டனா்.
ஊராட்சி மன்றத் தலைவா் தேவேந்திரன் மற்றும் இயற்கை ஆா்வலா் நடராஜன் ஆகியோா் இணைந்து பண விதைகளை சேகரித்து செங்காடு ஊராட்சி கிராமங்களில் உள்ள அரசு காலியிடங்கள், ஏரிக்கரைகள் சாலை ஓரங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த பனை விதை நடவு பணிகளுக்கு 100 நாள் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ராஜவேலு, உதவி திட்ட அலுவலா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் மற்றும் ஊா் பொதுமக்கள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.