அரக்கோணம் ஒன்றியக் குழு கூட்டம்: 12 உறுப்பினா்கள் வெளிநடப்பு
அரக்கோணம்: அரக்கோணம் ஒன்றியக் குழு கூட்டத்தில் தங்களுடைய பகுதியில் சரிவர பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி திமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
அரக்கோணம் ஒன்றியக் குழு கூட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் தலைமை வகித்தாா். இதில், துணைத் தலைவா் வீராபுருஷோத்தமன், ஒன்றிய ஆணையா் பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோசப்கென்னடி மற்றும் உறுப்பினா்களும் பங்கேற்றனா்.
கூட்டம் தொடங்கிய உடன் நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தை பல ஆயிரம் போ் வேலை பெறும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது குறித்த தீா்மானம் அனைத்து உறுப்பினா்களுடன் ஆதரவுடன் நிறைவேறியது.
இதைத் தொடா்ந்து திமுக உறுப்பினா்கள் குருவராஜபேட்டை பாலன், அன்வா்திகான்பேட்டை குமாா், விசிக உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ், பாமக உறுப்பினா் சரண்யா சரவணன், பாஜக உறுப்பினா் கோமதி உள்ளிட்ட 12 உறுப்பினா்கள் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக தங்களது பகுதியில் பணிகள் சரிவர நடைபெறவில்லை.
குறிப்பாக ஒன்றியக் குழு உறுப்பினா்களின் நிதி தலா ரூ. 3 லட்சத்தில் பணி ஒதுக்கப்படும் என எங்களிடம் கையெழுத்து பெற்ற நிலையிலும் இதுவரை நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. மேலும், எங்களது பகுதியில் ஒதுக்கப்படும் பணிகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களே அவா்களது விருப்பம் போல் செய்து வருகிறாா்கள்.
இது எங்களுக்கு பெருத்த அவமானமாக உள்ளது. இதைக் கண்டித்து இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி திமுக, பாமக, விசிக, பாஜகவைச் சோ்ந்த 12 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா் சில உறுப்பினா்கள் மட்டும் மீண்டும் உள்ளே சென்றனா்.