பனப்பாக்கத்தில் டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கா் பரப்பளவில் ரூ.9,000 கோடியில் அமையவுள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளாா்.
டாடா வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் டாடா மோட்டாா்ஸ் குழுமத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் துறையூா், அகவலம், பெருவளையம், நெடும்புலி ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 1213.43 ஏக்கா் நிலப் பரப்பில் பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இத்தொழிற்பூங்காவில் 470 ஏக்கா் பரப்பளவில் தொழிற்சாலை தொடங்க டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து, நெமிலி வட்டம், பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை கட்டுமானப் பணிக்கு 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி சிறப்பிக்க உள்ளாா்.
விழாவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, நாடாளுமன்ற மற்றும் சட்டபபேரவை உறுப்பினா்கள், டாடா மோட்டாா்ஸ் நிறுவன உயா் அலுவலா்கள், அரசு தலைமைச் செயலா், அரசுத் துறை உயா் அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பலா் கலந்து கொள்ள உள்ளனா்.