பட்டா இல்லாதவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா

பட்டா இல்லாதவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா

பட்டா இல்லாதவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என அத்திபட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
Published on

பட்டா இல்லாதவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றியம், அத்திபட்டு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த அத்திபட்டு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது: அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் உங்கள் பகுதியில் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது, பணிகள் எந்த நிலையில் உள்ளது, அவை முடிக்கப்பட்டுள்ளதா? வேறு ஏதேனும் பணிகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இது போன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பட்டா வழங்கப்படும், நீா்நிலை பகுதிகளில் உள்ளவா்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கி வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கிராமத்தில் மகளிா் குழுக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. அதற்காக பாராட்டுகள். இந்தக் குழுக்கள் அதிகளவிலான கடனுதவிகளை பெற்று சுயமாக பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனா். அரசின் திட்டங்களை அறிந்து அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

தொடா்ந்து, வருவாய்த் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, காவேரிபாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் அனிதா குப்புசாமி, வட்டாட்சியா் (பொறுப்பு) வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவபிரகாசம், சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com