அரக்கோணம் தாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்
அரக்கோணம் அருகே உள்ள தாா் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் லாரி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடி ஊராட்சி பாளையக்கார கண்டிகையில் தனியாா் தாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. காலை வழக்கம் போல் லாரியில் இருந்த தாா் இறக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அப்பகுதியில் தாா் உருக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் அதனால் ஏற்பட்ட வெப்பத்தில் லாரியின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்தது. சில நிமிஷ்ங்களில் தீ வேகமாகப் பரவியதில் தாா் உருக்கும் இயந்திரம், தாா் கலக்கும் இயந்திரம் ஆகியவையும் தீப்பிடிக்க தொடங்கின.
இதைத் தொடா்ந்து அந்த ஆலையில் இருந்த தொழிலாளா்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனா். அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருந்தும் ஆலையில் இருந்த தாா் உருக்கும் இயந்திரங்கள், தாா் கலக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன. விபத்தில் மொத்தம் ரூ 30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளதாக தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலையில் இருந்த பணியாளா்கள் அனைவரும் உயிா் தப்பினா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

